வல்லிக்கண்ணன் கடிதங்கள் 13

வல்லிக்கண்ணன்                                                                          சென்னை 12-12-2001

அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம்.

       உங்கள் 10ஆம் தேதிக் கடிதமும், இன்லண்டு தாள்கள், ஸ்டாம்புகளும் நேற்று கிடைக்கப் பெற்றேன். நன்றி. சந்தோஷம்.

      கண்கள் சரியாகிவிட்டன. 45 நாட்களுக்குப் பிறகு கண் மருத்துவரிடம் டெஸ்ட் பண்ணி, கண்ணாடிக்கான விவரம் எழுதி வாங்கியாச்சு. கடையில் கண்ணாடிக்கும் ஆர்டர் பண்ணியாச்சு. அது வெள்ளியன்று கிடைக்கும்.

          நலமாக இருக்கிறேன். அண்ணியும் பிள்ளைகளும் சுகம். பனியும் குளிரும் இங்கும் அதிகம் தான். பனியை, குளிரை பொருட்படுத்தாத பிரம்மங்களுக்காக சென்னையில் சங்கீத விழா தொடங்கி ஜாம் ஜாம் என்று வளர்கிறது. எத்தனை சபாக்கள்! எத்தனை கச்சேரிகள்!

       ‘திணை’ (பழசு) கிடைத்து படித்துவிட்டதை அறிய மகிழ்ச்சி. ‘மையம்’ என்றொரு வித்தியாசமான இதழின் பழைய பிரதி ஒன்றை நேற்று புக் போஸ்டில் அனுப்பினேன். அதன் இன்னொரு இதழை இன்று அனுப்புகிறேன். புதுமையாக, கனமான விஷயங்களைத் தரும் இதழ் நடத்த வேண்டும் என்கிற மூளை அரிப்பு அவ்வப்போது சிலசில பேருக்கு ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. அவர்களுடைய முயற்சிகள் தொடர்ந்து வளர வழி கிடைப்பதில்லை. அது தான் கஷ்டம்.

    ‘பயணம் புதிது’ கிடைத்து வருகிறது. முந்திய இதழில் இடம்பெற்ற பாட்டாளியின் கவிதை நூல் மதிப்பீட்டை (நதிக்கரையில் தொலைந்த மணல் பற்றியது) படித்தேன். ‘லோகோ பின்ன ருசி’!

         பயணம் புதிது புது இதழும் படித்தேன். அமெரிக்காவின் பயங்கரவாதம் ஆப்கானிஸ்தானை புழுதிக் காடாக்குகிறது. அப்பாவி மக்களை சாகடிக்கிறது; அகதிகளாக்குகிறது; பசிக்கு உள்ளாக்குகிறது. பயங்கரவாதி பின்லேடன் அகப்படுகிற வழியைக் காணோம்.

   உங்கள் 16-11-2001 கடித விஷயங்களும் அறிந்தேன். முதுகலை ஆசிரியர்களுக்கான அரசுத் தேர்வு எழுதியதை அறிந்தேன். Inter-View அழைப்பு வந்துவிட்டதா? இன்னொரு தேர்வு எழுதியவர்களுக்கு ‘நேர்காணல்’ நடந்துவிட்டது.

           சென்னையில் பல நாட்கள் மழை பெய்தது என்னவோ உண்மை. ஆனால் பல பகுதிகளிலும் சீராகப் பெய்யவில்லை. பல இடங்களில் சுமார் மழை தான். நெடுகிலும் ரோடுகள் படுபாடாவதி ஆகிப் போயின. குடிதண்ணீர் சப்ளை பண்ணும் 4 ஏரிகளிலும் நன்கு நீர் பெருகும்படி மழை பெய்யவில்லை. கால்வாசிக்குத்தான் தண்ணீர் சேர்ந்தது. சென்னைக் குடிநீர்ப் பிரச்னை எளிதில் தீரக் கூடியதில்லை. அரசியல் கட்சியினரின் திருக்கூத்துகளும் தான். 
                                                                                                                              அன்பு – வ.க./  

No comments:

Post a Comment

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்